என் புருஷன்தான்......

அன்று ராஜேஷுக்கு பிடித்த பாகற்காய் பிட்லே செய்து விட்டு அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் ரேவதி. திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகியும் கூட்டுக் குடும்பம் என்பதால் அதிகம் வெளி வாசல் என்று செல்வதற்கு இயலாத ஒரு சூழ்நிலை. அதில் சற்று வருத்தம் என்றாலும், ராஜேஷின் மிக நல்ல குணமும், அவளிடம் அவன் வைத்திருந்த  ஒரு அபரிமிதமான பாசமும் அந்த ஏக்கத்தை கொஞ்சம் தீர்த்தது. தனியார் கம்பெனியில் பெரிய ஜெனெரல் மனேஜராக பணி புரியும்  ராஜேஷுக்கு கை நிறைய சம்பளம் மற்றும் கார், வீடு, டெலிபோன் என்று எல்லா சொவ்கரியமும் கிடைத்ததால் வாழ்க்கை சுகமாகத்தான் இருந்தது. மாமனார் மாமியார் சற்று ஆச்சாரமாக இருப்பவர்கள் என்பதால் சமையல் அறையும் பூஜை அறையும் மிக சுத்தமாக இருக்க வேண்டும்.

தினம் சமையல் முடித்து மாமனார் மாமியாருக்கு பத்து மணிக்கு உணவு அளித்துவிட்டு சற்று ஒய்வு எடுப்பது ரேவதியின் வழக்கம். மாடர்னாக வளர்ந்த பெண் காலையில் டிபனும் மதியம் பனிரெண்டு மணிக்கு மேல் உணவும் சாப்பிட்டு பழகியதால் காலை உணவு இல்லை. சிறு வயதிலேயே காண்வென்டில் படித்ததால் பூஜை புனஸ்காரங்கள் அதிகம் ஈடுபாடு இல்லை. ரேவதியின் மாமியாருக்கு தன மருமகள் பூஜை செய்யாததும், நேரத்தில் சாப்பிடாமல் மதியம் வரை இருப்பதும் பிடிக்கவில்லை. மாலை ராஜேஷ் வீடு வந்ததும், எங்களை சற்று பெருமாள் கோவிலுக்கு கார்லே கூட்டிண்டு போறயா. வீட்டுலே ஒரு ஸ்லோகம், பூஜை ஒன்னும் இல்லாம வெறிச்சுனு இருக்குடா என்றாள் மாமியார். ரேவதியின் முகம் வாடிப் போனதை கண்ட ராஜேஷ், இதோ குளிச்சுட்டு வரேன் போகலாம் என்று குளியலறைக்கு சென்றான். போகும் வழியில் தன ஆபீஸ் பையில் இருந்து ரெண்டு முழம் மல்லி பூவும், படிக்க ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகம் இரண்டையும் ரேவதி கையில் கொடுத்தான். கோவிலில் இருந்து திரும்பிய ராஜேஷ் அவனுக்கு மிகவும் பிடித்த பாகற்காய் பிட்லேயின்  ருசியில் மனம் மகிழுந்து, அது எப்படி நீ பண்ணற பிட்லே மட்டும் இவ்வளவு நல்லா இருக்கு என்றான். கண்ணில் பொங்கிய நீரை மறைத்தவாறே, ஆமாம் எனக்கு சமைக்கதானே தெரியும் ஸ்லோகமும் பூஜையுமா பண்ண தெரியும் என்றாள். பழங்கால மனிஷி அம்மா, பூஜையே வாழ்க்கைனு வளந்தவ, அதான் அப்படி சொல்லறா. அதை பெரிசா எடுத்துக்காதே. உன்னுடைய அருமை தெரிஞ்ச நான் இருக்கேன். கவலை படாதே என்ற ராஜேஷிடம் ஒன்றிப்போனாள் ரேவதி. சொல்லமறந்திட்டேனே, எனக்கு வாஷிங்க்டன்லே ரெண்டு மாசம் மார்கடிங் டூர் அனுப்புகிறார்கள். மனைவியையும் அழைத்துப்போக அனுமதி கிடைத்து விட்டது! சந்தோஷமா என்றான். என்னங்க, மாமனார் மாமியாரை தனியா விட முடியாது என்று தானே நாம இன்னும் ஹனிமூன் கூட போகாம இருக்கோம். ரெண்டு மாசம் உங்க கூட நான் எப்படி வரது. என்றாள் ரேவதி. அந்த கவலை உனக்கு வேண்டாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவங்க வெகு நாளா ஆசைப்பட்ட காசி ராமேஸ்வரம் மற்றும் ஹரித்வார் ரிஷிகேஷ் ட்ரிப் பாகேஜ் டூர்லே ஏற்பாடு பண்ணிட்டேன். சரியா ரெண்டு மாசம் ட்ரிப். நாம் திரும்பி வந்தப்புறம் தான் அவங்க வருவாங்க. என்ன திருப்தியா என்றவனை அணைத்துக்கொண்டு, என் புருஷன் தான் ஒசத்தி என்று சின்ன குழந்தையைப் போல் சிரித்தாள் ரேவதி. ..    எல்லோரையும் அரவணைத்து செல்வதுதான் நல்ல குடும்பத்தின் லக்ஷணம்

Write a comment ...